Monday, May 14, 2018

தோல்வியை எதிர்கொள்ளும் மந்திரம்

தோல்வியை கண்டு பயந்து ஓடுவதை நிறுத்துங்கள்! தோல்வி, நமது வெற்றி பயணத்தை உறுதி செய்யும் மைல்கல். ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போதும், அது, நாம் வெற்றிக்கு பயணிக்க வேண்டிய தொலைவை சுட்டிக்காட்டுகிறது!

எந்த குழந்தையும் பிறந்தவுடன் அடி எடுத்து வைத்து நடந்து விடுவதில்லை. வெற்றியும் எடுத்தவுடன் மகுடம் போல் சூட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. வெற்றியாளர்கள் பலரும் பல தோல்விகளுக்கு பின்னே வெற்றி மகுடத்தை சூட்டி கொண்டுள்ளனர். கைநழுவி போகும் வெற்றியை பற்றியே யோசிக்கிறோம். கொஞ்சம் மாற்றி தோல்விகளை பற்றி சிந்தியுங்கள். வெற்றி நம் கைகளுக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்வோம்!

தோல்விகள் கண்டு அஞ்சக்கூடாது. ஆனால் தோல்விகளை ஆராய வேண்டும். தோல்வி தரும் பாடத்தின் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தோல்வி தரும் வலி நம்மை செதுக்குகிறது. ஆம்! உளியின் வலிக்குப் பயந்த கல் சிற்பமாவதில்லை! தொடர்ந்து நாம் நம்மை செதுக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பாக தோல்வியை கருத வேண்டும்.

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. ஒரு நாணயத்தை சுண்டி விடும் போது கிடைக்கும் பூ மற்றும் தலைக்கான வாய்ப்பாக வாழ்வில் வெற்றி, தோல்விகள் உள்ளன! நூறு தடவை சுண்டி விடும் போது வாய்ப்புகள் சமமாக இருக்கும்; அல்லது இரண்டிற்குமான வித்தியாசம் மிகச்சிறியதாகவே இருக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கலாம் அல்லது தொடர்ந்து தோல்விகள் கிடைக்கலாம். ஆனால், அவற்றை எதிர் கொள்ள மனரீதியான பக்குவம் வேண்டும்.

உங்களுக்கு மனரீதியான திட தன்மையை தரும் மந்திரம் இதுதான் - ‘இதுவும் நம்மை கடந்து போகும்’. தோல்வி வரும் போது, இந்த தோல்வி நிலையானது அல்ல. இதுவும் கடந்து போகும். விரைவில் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுங்கள். தோல்வியை கண்டு துவண்டு போகாமல், உடனே வெற்றிக்கான முயற்சியில் இறங்குவீர்கள்.

அந்த முயற்சி விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும் பட்சத்தில் வெற்றி உறுதி செய்யப்படும். அதேவேளையில் வெற்றி களிப்பில் இருக்கும் போதும் இந்த சொல்லை பயன்படுத்துங்கள். இந்த வெற்றி நிலையில்லாதது என்று உங்களை நினைக்க செய்யும். வெற்றியினால் ஏற்படும் களிப்பு உடனே நிறுத்தப்பட்டு, அடுத்த புதிய முயற்சிகளுக்கு அடுத்தடுத்த உயர்வுக்கு உங்களை அழைத்து செல்லும்.

தோல்விகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்... இன்னல் தான் இனிமை தரும். வீழ்வது வீழ்ச்சி அல்ல. அது விதைத்தலுக்கே! ஒவ்வொரு முறை விழும் போதும் விதைக்கப்படுகின்றோம் என்று உறுதி கொள்ளுங்கள். சிறிதளவு நீர் விதையை வளர செய்துவிடும். அது போல் உங்களின் சிறிய முயற்சி விரிச்சமாக உங்களை உயர்த்தக்கூடும்! வெற்றிக்கனிகள், ‘தோல்வி’ என்ற விதையில் இருந்தே பெறப்படுகின்றன!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home